குப்பை லாரி மோதி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ.2.12 லட்சம் நிதி உதவி

திருப்பூர், பிப்.25: திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (50). மாநகராட்சி 2வது மண்டலத்தில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 17ம் தேதி காலை பூண்டி-பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டப்பட்டு வரும் பாறைக்குழி அருகே கொசு மருந்து அடித்துக்கொண்டிருந்தார். அப்போது குப்பைகளை கொட்டுவதற்காக பாறைக்குழிக்கு மாநகராட்சி லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், நேற்று முரளியின் வீட்டிற்கு சென்று, அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சங்கத்தின் சார்பில் வசூல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்தை முரளியின் மனைவியிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுஜாத் அலி, பொருளாளர் முரளி, மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம், இளம் பொறியாளர் பிரபாகரன், 1வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: