பழங்குடிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை சுழற்சி முறையில் தேர்வு செய்ய வேண்டும்

ஊட்டி, பிப்.25: பழங்குடிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை சுழற்சி முறையில் தேர்வு செய்ய வேண்டும் என கோத்தகிரியில் நடந்த தமிழ்நாடு ஆதிவாசி மக்களின் தேர்தல் கோரிக்கை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக ஆதிவாசிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு ஆதிவாசி மக்களின் தேர்தல் கோரிக்கை விளக்க மாநாடு கோத்தகிரியில் நடந்தது. ரங்கநாதன் தலைமை வகித்தார். பழங்குடியின நலவாரிய உறுப்பினர் சத்தியராஜ் முன்னிலை வகித்தார். நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், வன நில உரிமை சட்டம் 2006ன் படி பட்டியலிடப்பட்ட பழங்குடிகளுக்கும், வனம் சார்ந்து வாழ்பவர்களுக்கும் தனிநபர் மற்றும் சமூக உரிமைகள் வழங்க வேண்டும். வன உரிமை சட்டப்படி மலை பகுதிகளில் உள்ள வன கிராமங்களை வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும். எந்த வளர்ச்சி திட்டத்தின் பெயராலும் பழங்குடியின மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்ற கூடாது. மலைப்பகுதிகளில் தரிசு நிலங்களுக்கு பட்டா வழங்க தடை செய்யும் அரசாணையை நீக்கி பழங்குடிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பழங்குடிகளுக்கும் இலவச வீட்டுமனை வழங்குவதுடன், ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும். தமிழ்நாட்டிலும் பழங்குடிகளுக்கான பல்கலைகழகம் கொண்டு வர வேண்டும். பழங்குடிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை சுழற்சி முறையில் தேர்வு செய்ய வேண்டும். பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பழங்குடியின மக்களையே பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை 5வது அட்டவணையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: