காலநிலையில் மீண்டும் மாற்றம் பனி மூட்டத்தால் குளிர் அதிகரிப்பு

ஊட்டி, பிப்.25:நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் குளிர் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை கடும் உறைபனி காணப்படும். ஆனால், இம்முறை ஜனவரி மாதம் வரை மழை பெய்த நிலையில் பனியின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த மாதம் 15ம் தேதிக்கு மேல் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. எனினும், கடந்த ஆண்டுகளை போல் தாக்கம் இல்லை. அவ்வப்போது உறை பனி விழுந்தது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

ஒரு சில பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பணியால் கருகின. மலை காய்கறிகள் இம்முறை பாதிக்கப்படவில்லை. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிமூட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் சில நாட்கள் பனிமூட்டம் காணப்பட்டதால் குளிர் அதிகமாக இருந்தது. ஆனால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு மீண்டும் வெயில் அதிகமாக காணப்பட்டது. ஆனால், மீண்டும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு கடந்த இரு நாட்களாக பகல் நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், பகல் நேரங்களில் குளிரை உணர முடிகிறது. குறிப்பாக, நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் தொட்டபெட்டா, பைக்காரா, சூட்டிங் மட்டம், படகு இல்லம் போன்ற பகுதிகளில் ஈரப்பதத்துடன் காற்று வீசியதால் குளிரும் அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குளிரால் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: