கோவை,பிப்.25: தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி ஆக பணியாற்றி வந்தவர் பெரியய்யா. இவர் சென்னை பெருநகர போலீஸ் ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டார். சென்னை சட்டம், ஒழுங்கு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த தினகரன், தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி ஆக நியமனம் செய்யப்பட்டார். நேற்று ஐ.ஜி தினகரன் ரேஸ்கோர்சில் உள்ள மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் ெபாறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 1998ம் ஆண்டில் போலீசில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த தினகரன், 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை கோவை மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றியுள்ளார். மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பணியாற்றிய இவர் மண்டல ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டார். ஐ.ஜி தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கோவை மாவட்டத்தில் எஸ்.பி ஆக பணியாற்றியிருக்கிறேன். கோவையின் சூழல் மற்றும் நிலவரம் குறித்து எனக்கு தெரியும். மீண்டும் கோவை வட்டாரத்தில் பணிக்கு வந்திருக்கிறேன். மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சட்ட விரோத செயல்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை அமைதியாக, எந்த பிரச்னையும் இல்லாமல் நடத்த மண்டல அளவில் போலீசார் முழு அளவில் ஒத்துழைப்பு தருவார்கள். தேர்தல் தொடர்பான பணிகளில் போலீசார் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள், ’’ என்றார்.