புதுடெல்லி: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனும் தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளியுமான சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு அதிரடியாக நாடு கடத்தப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்ரி பகுதியை சேர்ந்த சலீம் டோலா (59), நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாகவும், டி-கம்பெனியின் சர்வதேச போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் முக்கிய நபராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 1998ம் ஆண்டில் 40 கிலோ மாண்ட்ராக்ஸ் போதைப்பொருளுடன் பிடிபட்ட இவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தப்பியோடிய இவர், ஐக்கிய அரபு அமீரகத்தின் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடுகளில் பதுங்கி இருந்ததால் இவருக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2024ம் ஆண்டில் மகாராஷ்டிரா போலீசார் நடத்திய சோதனையில் 252 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இவரது மகன் தாஹிர் சலீம் டோலா கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பதுங்கியிருந்த சலீம் டோலாவை அந்நாட்டு உளவு அமைப்பு மற்றும் போலீசார் இணைந்து கடந்த கடந்த 25ம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இன்று சிறப்பு விமானம் மூலம் டெல்லி தொழில்நுட்ப விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சலீம் டோலாவை ஒன்றிய உளவு அமைப்புகள் முறைப்படி கைது செய்தன. சர்வதேச அளவில் சிந்தெடிக் போதைப்பொருள் நெட்வொர்க்கை நிர்வகித்து வந்த இவரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு, மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
