போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் கோவையில் இன்று 700 பஸ்கள் ஓடாது

கோவை,பிப்.25:  ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் கோவையில் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தாமல் போக்குவரத்து கழக நிர்வாகம் தொடர்ந்து இழுபறி செய்து கொண்டிருக்கிறது. உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்ட வலியுறுத்தி  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று(25ம்தேதி) முதல் கோவை மண்டலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோவை மண்டல பொதுச்செயலாளர் பெரியசாமி கூறுகையில், ‘‘ கோவை மண்டலத்தில் மட்டும் சுமார் 1200 பேருந்துகள் உள்ளன. இவற்றில் கொரோனா காலத்தை காரணம் காட்டி தற்போது 900 பேருந்துகள் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் 700 பேருந்துகள் வரை இயங்காது. கோவை மண்டலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 60 சதவீதம் பேர் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள்,’’ என்றார். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களான எல்.பி.எப், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: