எழுத்தர் பணியிட நேர்முகத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு

ஈரோடு, பிப்.25: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் எழுத்தர் பணியிட நேர்முகத் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாததால் தேர்வுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், அலுவலகங்களில் காலியாக உள்ள 37 பதிவுரு எழுத்தர், 32 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு செப்.10ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. செப்.30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்.24ம் தேதி (நேற்று) முதல் 27ம் தேதி வரையும், ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு வரும் 27ம் தேதி முதல் மார்ச் மாதம் 1ம் தேதி, 3ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் நேற்று காலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். ஆனால், நுழைவு வாயிலில் நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால், தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் கூறுகையில்,`தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து எங்களுக்கு 23ம் தேதி இரவு 9 மணிக்குதான் உத்தரவு வந்தது. இதனால் விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை’ என்றார்.

Related Stories:

>