கயிறு ஆலையில் பயங்கர தீ

ஆரல்வாய்மொழி, பிப்.25: செண்பகராமன்புதூரில் கயிறு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி  பகுதியை சேர்ந்தவர் சரணவன். இவர் செண்பகராமன்புதூர் கம்பி பாலம் அருகில்  கயிறு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலை சுற்று சுவர் அருகில் ஆடு மேய்க்கும்  தொழிலாளியான சாமுவேல் (70) குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார். அவர்  ஆடுகளை மேய்த்து ஆங்கேங்கே பட்டி அமைத்து தங்குவார். அவ்வப்போது இந்த  குடிசைக்கு வந்து செல்வார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவரது  குடிசை மற்றும் கயிறு ஆலையில் தீப்பிடித்துள்ளது. இதில் குடிசை முற்றிலும்  எரிந்து சாம்பலானது. அதுபோல் ஆலையில் கயிறு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த  தும்பு மற்றும் உற்பத்தி செய்து வைத்திருந்த  கயிறுகள், இயந்திரங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.

நேற்று  காலை ஆலையில் இருந்து புகை வருவதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனித்து  சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன்  தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இந்த சம்பவத்தில் சுமார் 4 லட்சம்  ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.  இது குறித்து சரணவன் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள அரிசி ஆலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: