திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 94 அங்கன்வாடி ஊழியர்கள் கைது

திருவண்ணாமலை, பிப்.25: பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ந்து 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 94 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் தொடர்ந்து 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் சுமதி, வெண்மதி, தஹஜிம்பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு நடைமுறையாகவில்லை. தொடர்ந்து பலமுறை இதுதொடர்பாக போராடியும் அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, உடனடியாக பணி நிரந்தரம் செய்து, வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ₹10 லட்சமும், உதவியாளருக்கு ₹5 லட்சமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 94 அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும், நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

Related Stories:

>