திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை, பிப்.25: மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை விடுவித்தனர். ஆனாலும், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மண்டபத்தில் இருந்து வெளியேற மறுத்து, அங்கேயே தங்கினர். மேலும், தொடர்ந்து 2வது நாளாக அந்த மண்டபத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சங்க நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறைந்தபட்சம் 30 சதவீதம் முதல் அதிகபட்சம் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ₹3 ஆயிரமும், அதற்கு அதிகமான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ₹5 ஆயிரமும் மாதந்தோறும் வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் சமரச முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்போம் என தெரிவித்து, மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

Related Stories: