புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி நீக்கம், ரயில்வேயில் ஆட்குறைப்பு; ஒன்றிய பாஜ அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

சென்னை: புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி நீக்கம் மற்றும் ரயில்வே துறையில் 2 சதவீத பணியாளர்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒன்றிய பாஜ அரசுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் இயங்கி வரும் பள்ளிகளில் 6ம் வகுப்பிலிருந்து பிரெஞ்ச் மொழி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு தொடர்புடைய மக்கள் வாழும் மாநிலமாகும். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் புதுச்சேரியிலும் பிரெஞ்சிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பிரெஞ்ச் மொழி படித்த மாணவர்களின் எதிர்காலம் அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. பிரெஞ்ச் மொழி கற்பித்த ஆசிரியர்களின் வேலை குறித்த கவலையும் அங்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, மீண்டும் பிரெஞ்ச் மொழியை அங்குள்ள பள்ளிகளில் கற்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதைப் போலவே, ஒன்றிய பாஜ அரசு ரயில்வே துறையில் 2 சதவீதம்ஆள் குறைப்பு என்ற அநீதியை ஆரவாரமின்றி இழைத்துள்ளது.

ரயில்வே துறையில் உள்ள 14.8 லட்சம் பணியிடங்களில் தற்போது 11 லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளன. 3 லட்சம் பணி நியமனங்கள் நிரப்பப்படாத சூழ்நிலையில் அங்குள்ள பணியாளர்கள் கூடுதல் சுமையுடன் பணியாற்றி வருகிறார்கள். வேலை இல்லா திண்டாட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இந்த ஆள் குறைப்பு நடவடிக்கை தொழிலாளர் விரோத நடவடிக்கை ஆகும். இதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: