உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு இறந்த பூசாரியின் சடலத்தை கேட்டு 2 கிராம மக்கள் காவல்நிலையம் முற்றுகை

உளுந்தூர்பேட்டை, பிப். 25: இறந்த பூசாரியின் சடலத்தை கேட்டு 2 கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.கிள்ளனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூசாரியாக இருந்தவர் பூமாலை(60). இவர் நேற்று முன்தினம் எ.குரும்பூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் குளத்தில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார். இவரது சடலத்தை உளுந்தூர்பேட்டை போலீசார் கைப்பற்றி  பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பூமாலையின் சடலத்தை கேட்டு பு.கிள்ளனூர் கிராமத்தில் உள்ள அவரது உறவினர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன் திரண்டனர். அதே நேரத்தில் அ.குரும்பூர் கிராமத்தை சேர்ந்த உறவினர்களும் காவல் நிலையம் திரண்டு வந்து, தங்களிடம் தான் பூமாலை சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றனர். இரண்டு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், இரண்டு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் உறவினர்களை தாசில்தார் கோபாலகிருஷ்ணனிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் பூமாலையின் சடலத்தை முதலில் அ.குரும்பூர் கிராமத்திற்கு எடுத்து சென்று இறுதி சடங்குகள் செய்வது என்றும், அதன் பிறகு பு.கிள்ளனூர் கிராமத்தில் அடக்கம் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: