×

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: பேராசிரியருக்கு 10 ஆண்டு சிறை மகிளா கோர்ட் தீர்ப்பு

கடலூர், பிப். 25: குறிஞ்சிப்பாடி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த  கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் ராகுல்ராஜன்(41). இவர் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள எத்தியோப்பியா பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும், வடலூர் கருங்குழி நயினார்குப்பம் பகுதியை சேர்ந்த சிங்காரவேலர் மகள் செந்தமிழ் செல்விக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. செந்தமிழ்செல்வி குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குண்டியமல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்தின்போது செந்தமிழ்செல்வியின் வீட்டார். 30 பவுன்நகை, பைக், ரூ1 லட்சத்துக்கு பொருள்களை சீர் வரிசையாக தந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிணி(3) என்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் வேலையைவிட்டு இந்தியாவுக்கு வந்த ராகுல்ராஜன் குண்டியமல்லூரில் உள்ள அரசு ஆரம்ப நிலைய குவாட்ரஸில் மனைவி, குழந்தையுடன் இருந்து வந்தார். அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு மனைவி செந்தமிழ்செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார் ராகுல்ராஜன். ஹரிணி காது குத்துக்கு வந்த செந்தமிழ்செல்வி தாயார் மற்றும் உறவினர்களிடம் அதிகமாக சீர் செய்ய வேண்டும் என்று கூறி தகராறு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறி வெளியே அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு செந்தமிழ்செல்வியிடம் தம்பி திருமணத்துக்கு பணம் கேட்டு ராகுல்ராஜனும், அவரது தாயார் மாரியம்மாளும் கொடுமைப்படுத்தி தகராறு செய்துள்ளனர். இதை தொடர்ந்து அன்று இரவு செந்தமிழ்செல்வி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செந்தமிழ்செல்வியின் தாயார் செண்பகவள்ளி குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல்ராஜன்(41), மாரியம்மாள்(61) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகிளா கோட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், ராகுல்ராஜனுக்கு 10 வருடம் சிறை தண்டனையும், மாரியம்மாளுக்கு 7 வருடம் சிறை தண்டனையும், தலா ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக செல்வப்பிரியா ஆஜரானார்.


Tags : Mahila court ,
× RELATED நகைக்காக மூதாட்டியை கொன்றவருக்கு...