விக்கிரவாண்டி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் ேமாதல் டிரைவர்கள் உள்பட 24 பேர் படுகாயம்

விக்கிரவாண்டி, பிப். 25: விக்கிரவாண்டி அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் மற்றும் பயணிகள் உள்பட 24 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கும்பகோணத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் அரசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைக்கு பிரிந்து செல்லும் அழுக்கு பாலம் என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணி அளவில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து பேராவூரணி சென்ற அரசு விரைவு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.  இந்த விபத்தில் இரு பேருந்துகளின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்தது.

இதில் அரசு விரைவு பேருந்து டிரைவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமு (47), அரசு பேருந்து டிரைவர்  மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த ராஜநாயகம் (41), பேருந்தில் பயணம் செய்த திருவாரூர் மாவட்டம் பூண்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பிரியா (23), சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (47), விஜயபுரம் சம்சுகனி மகன் அப்துல் ரஹ்மான், சென்னை கே.கே நகர் கலியமூர்த்தி (68), சென்னை கிருஷ்ணா நகர் சிவகுமார் மனைவி மனோ சித்ரா (32), சென்னை பூந்தமல்லி அப்துல்ரசாக் (36), சிதம்பரம் ராஜீவ்காந்தி மனைவி சுகந்தி (26), மயிலாடுதுறை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நாகூரான் மகன் தங்கதுரை (27) உள்ளிட்ட 24 பேர் படுகாயமடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயம்பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்தில் 10 பேர் படுகாயம்

திருவெண்ணெய்நல்லூர்  அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரங்கியூர் பைத்தாம்பாடி  கூட்டுச்சாலையில் நேற்று காலை பழைய இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது  பின்னால் சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 10  பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து  திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Stories:

>