நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க தேர்தல் இன்று நடக்கிறது

நெய்வேலி, பிப். 25: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதனால் தொழிலாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்தை பெற்ற லாபத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனத்தில் முதல் சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் என நிலக்கரி வெட்டி எடுக்கும் மூன்று திறந்த ெவளி சுரங்கங்களும், முதல் அனல் மின்நிலைய விரிவாக்கம், இரண்டாவது அனல்மின் நிலையம், இரண்டாவது அனல்மின் விரிவாக்கம், புதிய அனல்மின் நிலையம் என நான்கு அனல் மின் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 8 ஆயிரம் நிரந்தர பணியாளர்களும், 5 ஆயிரம் அலுவலர்களும், பொறியாளர்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இது இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்கி வருகின்றது.

தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் மொத்த தொழிலாளர்களில் 51 சதவீத வாக்குகளை பெறும் சங்கமே முதன்மை சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாகும். அப்படி எந்த சங்கத்துக்கும் 51 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை எனில் அதிக வாக்குகள் பெற்ற சங்கம் முதன்மை சங்கமாகவும், அதற்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற சங்கம் என இரண்டு சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக கருதப்படும்.கடந்த 2000ம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அப்போது நடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனியாக முதன்மை சங்கமாக தேர்வு செய்யப்பட்டது.

 தொடர்ந்து 2004ம் ஆண்டும் தொடர்ந்து தொமுச வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொமுச, பாட்டாளி தொழிலாளர்கள் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டன. 2012ம் ஆண்டு நடந்த ரகசிய வாக்கெடுப்பில் தொமுச, அதிமுகவின் அண்ணா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கமும் வெற்றிபெற்றன. 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிஐடியு, தொமுச ஆகிய இரண்டு சங்கங்களும் தேர்வு செய்யப்பட்டன. கடந்த 2020ம் ஆண்டு தேர்தல் கொரோனாவால் நடத்தப்படாததால் இன்று ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நெய்வேலி நகரில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியினருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் நெய்வேலி பகுதி பரபரப்பாக காணப்படுகின்றது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள தொமுச, அண்ணா தொச, சிஐடியு, பாட்டாளி தொழிலாளர்கள் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி உட்பட 9 தொழிற்சங்கங்கள் களத்தில் உள்ளன. தொழிற்சங்க நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Related Stories: