பாஜகவுடன் கூட்டணி சேரும் என்ஆர் காங்., அதிமுக சாம்பலாகி விடும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாபம்

புதுச்சேரி, பிப். 25: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை  கலைத்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று அண்ணா சிலை அருகே நடந்தது. மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.  முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது: மத்தியில் உள்ள மோடி அரசால் புதுவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் கூட்டணி கட்சியாக உள்ள என்ஆர் காங்கிரசும், அதிமுகவும் தான் பொறுப்பு. 10 நாட்களே உள்ள நிலையில் எங்களுடைய  ஆட்சியை கவிழ்ப்பதற்கு காரணம் என்ன? பிரதமர் வருவதற்கு முன் காங்கிரஸ்  ஆட்சி இருக்கக் கூடாது. இதுதான் அவர்களது திட்டம்.  தங்களுடைய அதிகார பலம், பணம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி, காங்கிரசில் இருந்து வெளியே சென்ற சில கருப்பு ஆடுகள் துரோகிகள் துணையோடும் ஆட்சியை கவிழ்த்துள்ளார்கள்.

 நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என்று நான் கூறுகிறேன். நீதிமன்ற தீர்ப்பும் அதனை சொல்லவில்லை. மேலும், முதியோர், விதவைகளுக்கு என 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற இருந்தோம். ஆனால், ஆட்சி கவிழ்ப்பு காரணமாக, இந்த திட்டத்தை பாஜக தங்களுடைய சாதனையாக கூறுவார்கள்.  ரடிவுகளின் ராஜ்ஜியத்தை நம்முடைய ஆட்சியில் ஒழித்துள்ளோம். ரவுடிகள்தான் பாஜகவின் உறுப்பினர்களாக உள்ளனர். 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட 18 பேர் டெபாசிட் இழந்தார்கள். டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கவிழ்க்கிறீர்களே, உங்களுக்கு சூடு, சொரணை இருக்கிறதா? புதுவை மக்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு முட்டை தான் கொடுப்பார்கள்.

 பாஜகவுடன் கூட்டணி சேரும் என்ஆர் காங்கிரசும், அதிமுகவும் சாம்பலாகி விடும். சர்வாதிகாரியான மோடிக்கு மக்கள் தண்டனை கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள். ஹரியானாவில் காங்கிரசை ஆட்சி அமைக்கவிடாமல் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர முன்னாள் முதல்வர் சவுதாலாவின் பேரனை 10 எம்எல்ஏக்களுடன் பாஜகவில் சேர வைத்து மோடி முதல்வராக்கினார். 3 மாதங்களுக்கு பிறகு அவரை தனி மரமாக்கினர். அதுதான் என்ஆர் காங்கிரஸ் தலைவருக்கு நடக்கப் போகிறது.  பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும்  சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று சவால் விடுகிறேன். எங்களது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும், என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி, வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், எம்எல்ஏக்கள் அனந்தராமன், விஜயவேணி, திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், சிபிஐ செயலாளர் சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், சிபிஎம் ராஜாங்கம், முருகன், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: