அமைச்சரின் வருகைக்காக நீண்டநேரம் பசியுடன் காத்திருந்த விவசாயிகள்

இளையான்குடி, பிப்.25: இளையான்குடி அருகே அமைச்சர் பாஸ்கரன் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பசியுடன் நீண்டநேரம் காத்திருந்தனர். இளையான்குடி அருகே கரும்பு கூட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், அப்பகுதி விவசாயிகளுக்கான பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொன்டு, நேற்று மதியம் விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதனால் 12 மணிக்கே ஆண் மற்றும் பெண் விவசாயிகள், அரசு அலுவலர்கள் சுமார் 70க்கும் மேற்பட்டோர் விழா நடைபெறும் இடத்தில் காத்திருந்தனர். ஆனால் ஒரு மணிக்கு வரவேண்டிய அமைச்சர் பாஸ்கரன், மதியம் 3.44 மணிக்கு வந்து சேர்ந்தார்.

விழாவில் ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை விவசாயிகளுக்கு வழங்கி, மாலை 4.48 மணிக்கு கிளம்பிச் சென்றார். பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ் வாங்குவதற்கு, பசியடன் காத்திருந்த விவசாயிகள் மிகவும் சோர்வாக காணப்பட்டனர். இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதில் கலெக்டர் மதுசுதன் ரெட்டி, எம்எல்ஏ நாகராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ராஜா, கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>