100 சதவீத மானியத்தில் 250 ஏக்கரில் முந்திரி சாகுபடி கலெக்டர் தகவல்

சாயல்குடி, பிப்.25:  ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படும். படிப்படியாக சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

கடலாடியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், முந்திரி சாகுபடி குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன் வரவேற்றார். குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ராகவன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேக்அப்துல்லா, செயற்பொறியாளர் மாணிக்கவேலு முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் லெட்சுமணன், பாலசுப்ரமணியன், நாராயணசாமி ஆகியோர் முந்திரி வளர்ப்பு, பராமரிப்பு, சாகுபடி, விற்பனை குறித்து விளக்கி பேசினர். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 469 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

தோட்டக்கலை சார்பாக 100 சதவீத அரசு மானியத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகமான தரிசுநிலங்கள், வறட்சியை தாங்கி, அதிக மகசூல் தரக்கூடிய மானவாரி பகுதியான கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில் முதற்கட்டமாக முந்திரி கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளன. சாயல்குடி பகுதியில் அதிகமான செம்மண் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அரசு புறம்போக்கு தரிசுநிலங்கள், மற்றும் விவசாயிகளின் தரிசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும். நிலம் சீரமைக்கப்பட்டு முந்திரி காடுகள் அமைக்கப்பட உள்ளன. பண்ணைக்குட்டைகள், வேலி அமைக்கப்படும். விவசாயிகளின் ஒத்துழைப்போடு இத்திட்டம் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும். விவசாயிகள் உதவிகள், ஆலோசனை பெற தோட்டக்கலை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் கடலாடி தோட்டக்கலை உதவி இயக்குனர் டெலின்ஸ் நன்றி கூறினார். வேளாண்துறை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை, வேளாண்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: