மாணவிகள்,பெண்களுக்கு போதை ஆசாமிகளால் தினமும் தொல்லை எஸ்.பி. கவனம் செலுத்துவாரா?

சாயல்குடி, பிப்.25: முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை இருப்பதால், மாணவிகள், பெண்களுக்கு போதை ஆசாமிகளால் இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.முதுகுளத்தூர் அருகேயுள்ள மேலச்சிறுபோது கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு முறையான் சாலை வசதி, கூடுதல் பஸ் வசதி இல்லை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள சிக்கல் முதுகுளத்தூர் சாலை செல்லும் மேலச்சிறுபோது விலக்கு ரோட்டிற்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர்.இந்த பஸ் நிறுத்தம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு மேலச்சிறுபோது, எஸ்.குளம், கீழச்சிறுபோது, பி.கீரந்தை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சை, பரிசோதனைக்காக வந்து செல்கின்றனர். அதிகமாக கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தை வைத்துள்ள பெண்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கீழச்சிறுபோது எல்லை எனக்கூறி மேலச்சிறுபோது பஸ் நிறுத்தம் அருகே வயற்காட்டில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் டாஸ்மாக் இயங்கி வருகிறது.

இங்கு சரக்கு வாங்கும் குடிமகன்கள் பஸ் நிறுத்தம், பஸ் நிறுத்தம் அருகே உள்ள குளத்து கரை, சாலையோர மரம் பகுதி என கும்பலாக அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேரி உடை அவிழ்ந்து அலங்கோலமாக கிடக்கின்றனர்.

இதனால் பெண்கள் முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சில போதை ஆசாமிகள் ஆபாச வார்த்தைகளை பேசிக்கொண்டு, தொந்தரவு செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இதனால் பஸ் ஏற வரும் மாணவிகள், பெண்கள் வீட்டு ஆண்கள் துணையோடு வரும் நிலை உள்ளது. முதுகுளத்தூர் சென்று விட்டு வரும் போது காத்து கிடந்து அழைத்து செல்லும்அவலம் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். எஸ்.பி கார்த்திக், போலீசாரை காவல் பணிக்கு அப்பகுதியில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: