*ஆற்றின் கால்வாய்களில் 20 இடத்தில் இயற்கை நீரூற்றுகள்
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரகத்தில், கோடை வெயிலால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. காட்டை விட்டு வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு, குடிநீர் வழங்கிட தீர்வு ஏற்படுத்த ஆற்றின் கால்வாய்களில் 20 இடத்தில் இயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மண்டலத்தில் தர்மபுரி, ஓசூர் வனக்கோட்டங்கள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 1700 சதுர கி.மீ., வனம் காப்பு காடுகளை கொண்டது.
இந்த மாவட்ட காடுகள் இரண்டு மாநிலங்களான கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த காடுகள் காவிரி, தென்பெண்ணை ஆறு, சனத்குமார நதி, வாணியாறு, கம்பைநல்லூர் ஆறு ஆகிய ஆறுகளுக்கு நீர் பிடிப்பு பகுதியாக உள்ளன.
தர்மபுரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மையும் இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. காவிரி ஆற்றங்கரையையொட்டி ஆற்றோர காடுகள் அமைந்துள்ளன.
இக்காடுகளில் யானை, சிறுத்தை, காட்டுப்பன்றிகள், கரடி, காட்டெருமை, உடும்பு, செந்நாய், புனுகுப்பூனை, நரி, குரங்கு, கீரிப்பிள்ளை, மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளும், ஊர்வனவும் அதிகம் உள்ளன.
தர்மபுரி வனக்கோட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு, மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்கள் உள்ளன. இதில் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரக காடுகளில் மட்டுமே யானைகள் அதிகம் உள்ளன. ஓசூர் வனக்கோடட்த்தில் இருந்து வெளியே வரும் யானைகள், சிறுத்தைகள் பாலக்கோடு வனப்பகுதிக்குள் வந்து தான், பிற வனப்பகுதிக்கு செல்கின்றன.
இதனால் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகளின் விளை நிலங்களை சேதப்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க பாலக்கோடு வனச்சரகத்தில் சோலார் மிதக்கும் மின்வேலி 15 கி.மீ., தூரம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டி முதல் சீங்காடு வரை 15 கி.மீ., மிதக்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகள் வெளியே வருவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் யானைகளுக்கு தேவையான குடிநீர் வசதி ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வனவிலங்குகளுக்கு வழங்கப்படுகிறது. பழுதடைந்த தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு, அதிலும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. 3 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது. பாலக்கோடு சரகத்தில் மட்டும் புதியது, பழையது என 6 தொட்டிகளில் தண்ணீர் தினசரி நிரப்படுகிறது.
மேலும், மாரண்ட அள்ளி, கரகூர் பகுதியிலும் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதுபோக தர்மபுரி மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதிகளில் யானைகள் மற்றும் வனவிலங்கள் தண்ணீர் குடிப்பதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் காற்றாறு கால்வாய்களில் 20 இடங்களில் இயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கை நீருற்றுகளில் யானை, காட்டெருமை, காட்டுபன்றிகள், மான்கள் தண்ணீர் குடித்து செல்லுகின்றன.
இதனால் கடும் வறட்சியிலும் காட்டை விட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வெளியே வருவதில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போயின. காட்டாறு, தடுப்பணை, கசிவுநீர் குட்டைகளில் தண்ணீர் கிடையாது.
இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்காக 20 இடங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் சின்னாறு கால்வாய், காட்டாற்று கால்வாய், தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் பகுதியில் குழிதோண்டி இயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாலக்கோடு, வனச்சரகத்தில் 6 இடங்களிலும், ஒகேனக்கல் வனச்சரகததில் 6 இடங்களிலும், பென்னாகரத்தில் 2 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் இயற்கை நீரூற்றுகள் வனத்துறையின் சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் 11 இடங்களுக்கு மேலாக சிமெண்ட் தண்ணிர் தொட்டிகளிலும் தண்ணீர் தினசரி நிரப்பப்படுகிறது,’ என்றார்.
