கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

சென்னை: பட்டப்பகலில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் மர்ம கும்பல் கடத்த முயன்றது. பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்து தப்பி ஓடியது. பட்டினப்பாக்கம் ராஜா தெருவில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மதியம் தெருவில் சிறுவர், சிறுமிகள் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர், குழந்தைகளிடம் நைசாக பேசி “கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடலாம்” என்று கூறி ஆட்டோவுக்குள் அழைத்துள்ளனர். அப்போது ஒரு சிறுமி, “நாங்கள் ஓடி பிடித்துதான் விளையாடுவோம். கண்ணாமூச்சி விளையாட மாட்டோம்” என்று கூறியிருக்கிறாள். ஆனாலும், கண்ணாமூச்சி விளையாட மர்ம நபர்கள் அழைத்துள்ளனர்.

உடனே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு சிறுமி, வீட்டுக்கு சென்று பாட்டியிடம் கூறியிருக்கிறாள். உடனே அவர் பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தார். இதை பார்த்த ஆட்டோ கும்பல் குழந்தைகளை ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவர்களிடம் விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பெற்று ஆட்டோவில் வந்த நபர்கள், குழந்தை கடத்தல் கும்பலா என விசாரிக்கின்றனர்.

Related Stories:

>