திருவள்ளூர் செய்தி துளிகள்

சாலை விபத்தில்  கல்லூரி மாணவி பலி: லாரி டிரைவர் கைது

புழல்: சென்னை பெரம்பூர் ஆதிசேஷன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகள் மதுமிதா (20). இவர் செங்குன்றம் அடுத்த  புள்ளிலைன் கிராமத்திலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலையில் மதுமிதாவும் இவருடன் படிக்கும் தோழி அர்ச்சனாவுடன் (19) மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றனர்.  செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருந்து கம்பெனி அருகே சென்றுகொண்டிருந்தபோது. மாதவரத்திலிருந்து  செங்குன்றம் நோக்கி வந்த லாரி, முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி விழுந்தனர்.  மதுமிதா தலையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி மதுமிதா நேற்றுமுன்தினம் மதியம்  பரிதாபமாக இறந்தார். தோழி அர்ச்சனா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிப்குமார் (41) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குட்கா விற்றவர் கைது

பூந்தமல்லி: சென்னை வளரசவாக்கம் அருகே சின்னப்போரூரை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவர், வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டலுக்கு அருகே ஒரு பெட்டிக்கடையும் வைத்துள்ளார். இக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் விற்பதாக நேற்றுமுன்தினம் மதுரவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அண்ணாமலையின் வீடு மற்றும் ஓட்டலில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 5 ஆயிரம் பாக்கெட் குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணாமலையை கைது செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், ஒரு கார் திடீரென பிரேக் அடித்து நின்றது. இதனால் அதன்பின்னே வந்த கார், வேன், லோடு ஆட்டோ என மொத்தம் 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. எனினும், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்துக்குள்ளான 6 வாகனங்களையும் அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>