கல்வராயன்மலையில் பயங்கரம் கல்லால் விவசாயி அடித்து கொலை

சின்னசேலம், பிப். 24: கல்வராயன்மலையில் நிலத்தகராறு பிரச்னையில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மட்டப்பாறை கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சடையன்(85). இவருக்கு அண்ணாதுரை(67), ஆசைத்தம்பி(65), ராசேந்திரன் ஆகிய 3 மகன்களும், வெள்ளையம்மா என்ற மகளும் உண்டு. இதில் ராசேந்திரன் இறந்து விட்டார். இவருக்கு மட்டப்பாறை அருகில் உள்ள துரூர் எல்லையில்  விவசாய நிலம் உள்ளது. அதற்கு அருகில் ஆற்றங்கரையோரம் சிறிது புறம்போக்கு நிலமும் இவரது அனுபவத்தில் இருந்துள்ளது. இந்நிலையில் துரூர் கிராம மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கரிய ராமர் கோயில் கட்ட  நிலம் கேட்டதால் பணம் வாங்கிக் கொண்டு ஊர் பொதுவில்  சுமார் 60 சென்ட் இடத்தை கிரயம் செய்து கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் 22ம் தேதி மாலை 6 மணியளவில் சடையன் அனுபவித்துக்கொண்டிருந்த புறம்போக்கு நிலத்தை கோயில் பயன்பாட்டிற்காக துரூர் கிராமத்தை சேர்ந்த பழனி(30), மூர்த்தி என்கிற மூக்குத்தியான்(27), சின்னப்பையன்(65) ஆகிய 3 பேர் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆடு காணவில்லை என்று அந்த பக்கம் தேடிச்சென்ற சடையன், அவரது மகன் ஆசைத்தம்பி இதை பார்த்துள்ளனர்.  இதையடுத்து  அங்கு சென்ற சடையன் ஏன் என் இடத்தை சீரமைக்கிறீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது. அப்போது  உன் பட்டா இடத்தை வாங்கும்போதே இதுவும் எங்கள் பாத்தியத்தில் வருகிறது என்று கூறியதாக தெரிகிறது.  அப்போது சடையன் நான் இந்த இடத்தை விற்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பழனி, மூர்த்தி, சின்னப்பையன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்லால் சடையனையும், அவரது மகன் ஆசைத்தம்பியையும் தாக்கி உள்ளனர். அப்போது ஆசைத்தம்பி தப்பித்து ஓடி விட்டார். கல்லடி பட்ட சடையன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.

தகவல் அறிந்து கரியாலூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆசைத்தம்பி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனி, மூர்த்தி, சின்னப்பையன் ஆகியோரை கைது செய்தனர்.  நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கல்வராயன்மலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>