மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்

திருப்போரூர்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தரக் கோரியும், 75 சதவீதத்துக்கு அதிக ஊனம் ஏற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தித் தரக்கோரியும், தனியார் துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழகஅரசு தனிச்சட்டம் இயற்றக் கோரியும் கடந்த 9ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடந்தது. அதில், பலர் கைது செய்யப்பட்டு விடுதலை ஆயினர்.

இந்நிலையில் அதே கோரிக்கைகளை முன் வைத்து 2வது முறையாக நேற்று, மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்ராணி வரவேற்றார். பொருளாளர் திருஞானசம்பந்தன் முன்னிலை வகித்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், அவர்களின் பாதுகாப்பாளர்களும் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.

அவர்களை வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே அனுப்ப மறுத்து போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் அனைவரும் அலுவலக வாயில் முன்பு சாமியானா பந்தல் அமைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்களை மா.கம்.யூ. மாவட்ட செயலாளர் செல்வம், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் பகத்சிங்தாஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர். சங்க மாவட்டப் பொருளாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தாமோதரன், வாலாஜாபாத் நிர்வாகி அரிகிருஷ்ணன், காஞ்சிபுரம் வட்ட நிர்வாகி பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நல சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை போராட்டம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.

* கஞ்சி காய்ச்சும் போராட்டம்

செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் செங்கல்பட்டு தாலுகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை, தாலுகா அலுவலகம் செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டதில் ஈடுபட்டனர்.

Related Stories: