நாளை மறுநாள் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் தொடக்கம்: காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணம்

சென்னை: தி.நகர் பல் அடுக்கு வாகன நிறுத்தம் நாளை மறுநாள் (26ம் தேதி) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன்படி காருக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில், ரூ.40 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டுமான பணி கடந்த  2018 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாகன நிறுத்தம் அமைந்துள்ள இடம் 16,146 ச.அ பரப்பளவு கொண்டது.

இந்த வாகன நிறுத்தத்தில் 2 கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்டது என்று மொத்தம் 9 தளங்கள் உள்ளன. இதில் ஒரே நேரத்தில் 2 கீழ்தளத்தில் தோராயமாக 550 இருசக்கர வாகனமும், தரைத்தளம் மற்றும் 6 மேல்தளத்தில் 250 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்த முடியும். தானியங்கி முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பல் அடுக்கு வாகன நிறுத்த பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். இதன்படி வரும் வெள்ளிக்கிழமை முதல் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>