தா.பேட்டை அருகே

தா.பேட்டை, பிப்.24: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த பி.மேட்டூரை சேர்ந்த பழனிவேல்(41). துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோகனாம்பாள் (38) தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியை. தம்பதிக்கு 15 மற்றும் 8 வயதில இரு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 19ம் தேதி பழனிவேல் தா.பேட்டை-துறையூர் ரோட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி மோகனாம்பாள் ஜெம்புநாதபுரம் காவல்நிலையத்தில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் இறந்துபோன பழனிவேலுவின் நண்பரான ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (42) என்பவருக்கும், மோகனாம்பாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

மோகனாம்பாளுக்கும், ராஜாவிற்கும் கடந்த நான்கு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பழனிவேலு வீட்டில் இல்லாத சமயம் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த பழனிவேல் தகராறு செய்து வந்ததால் அவரை கூலிப்படை வைத்து அடித்து உதைக்குமாறு மோகனாம்பாள் கூறியுள்ளார். இதையடுத்து பழனிவேலுவை கொலை செய்து விட்டால் மோகனாம்பாளுடன் சேர்ந்து இருக்கலாம் என கருதி இதற்காக கோட்டப்பாளையம் அருகே உள்ள வளையப்பட்டியை சேர்ந்த நண்பர் சுதாகரின் உதவியை நாடியுள்ளார். சுதாகர், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரத் (38) என்ற கூலிப்படை தலைவனை ராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பழனிவேலுவை கொலை செய்ய பரத்திடம் ஒன்றரை லட்சம் கொடுத்த ராஜா பழனிவேலுவை அடையாளம் காட்டியுள்ளார்.

அதையடுத்து சம்பவத்தன்று (19ம் தேதி) துறையூரிலிருந்து தா.பேட்டைக்கு வீட்டிற்கு பைக்கில் வந்த பழனிவேலுவை காரில் பின்தொடர்ந்த கூலிப்படை தலைவர் பரத் சக்கம்பட்டி வனப்பகுதி அருகே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பழனிவேலுவை வழிமறித்து கயிறு மூலம் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். அப்போது உயிருக்கு போராடிய அவரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பைக்கை சேதப்படுத்தி விபத்து நடந்ததுபோல் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

கணவரின் உடலை பார்த்த மோகனாம்பாள் விபத்து நடந்ததுபோல் காயம் இல்லாமல் இருந்ததால் போலீசார் சந்தேகப்படுவதை அறிந்து தான் தப்பித்துக் கொள்வதற்காக கணவர் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி மோகனாம்பாள், கள்ளக்காதலன் ராஜா, கூலிப்படையை அறிமுகம் செய்துவைத்த சுதாகர் ஆகிய மூன்று பேரையும் கைது போலீசார் செய்துள்ளனர். கூலிப்படை தலைவன் பரத் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>