கந்தர்வகோட்டை அருகே கொள்முதல் நிலையம் மூடல் கண்டித்து விவசாயிகள் மறியல்

கறம்பக்குடி, பிப்.24: கந்தர்வகோட்டை அருகே கொள்முதல் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே செவந்தான்பட்டி சமத்துவபுரம் எதிரே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 நாட்களுக்கு முன் திடீரென மூடப்பட்டது. இதனால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இதை கண்டித்தும், கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் செவந்தான்பட்டி, புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் புதுப்பட்டி சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் புவியரசன், விஏஓ வீரபாண்டியன் மற்றும் கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே கொள்முதல் நிலையத்தை திறக்கப்பதாக தாசில்தார் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது. இதனால் கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: