கூலிப்படையை ஏவி கணவன் கொலை ஆசிரியை, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது

திருச்சி, பிப்.24: திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்துள்ள பி.மேட்டூரை சேர்ந்தவர் பழனிவேல்(41). துறையூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மோகனாம்பாள் (38). தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தற்காலிக ஓவிய ஆசிரியை. இவர்களுக்கு இரு மகன்கள். இந்நிலையில் கடந்த 19ம் தேதி பழனிவேல் தா.பேட்டை-துறையூர் ரோட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி மோகனாம்பாள் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். தா.பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகனாம்பாளின் செல்போனை ஆய்வு செய்தபோது பழனிவேலுவின் நண்பர் ராஜா (42) என்பவருடன் அடிக்கடி பேசிவந்ததும் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரிந்தது. ராஜா உப்பிலியபுரம் போக்குவரத்து கழக கிளை பணிமனையில் கேஷியராக உள்ளார். ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மற்றும் மோகனாம்பாளிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:

ஓவிய ஆசிரியை மோகனாம்பாளுக்கும், ராஜாவிற்கும் கடந்த நான்கு வருடமாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பழனிவேலு வீட்டில் இல்லாத சமயம் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த பழனிவேல் தகராறு செய்து வந்ததால் அவரை கூலிப்படை வைத்து அடித்து உதைக்குமாறு மோகனாம்பாள் கூறியுள்ளார். இதையடுத்து ராஜா கோட்டப்பாளையம் அருகே உள்ள வளையப்பட்டியை சேர்ந்த நண்பர் சுதாகர் என்பவரின் உதவியை நாடியுள்ளார்.

சுதாகர், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரத்(38) என்ற கூலிப்படை தலைவனை ராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பழனிவேலுவை கொலை செய்துவிட்டால் மோகனாம்பாளுடன் சேர்ந்து இருக்கலாம் என கருதிய ராஜா பழனிவேலுவை கொலை செய்து விடுமாறு பரத்திடம் கூறியுள்ளார்.

இதற்காக ராஜா ஒன்றரை லட்சம் கொடுத்துள்ளார். கடந்த 19ம் தேதி ராஜா கூலிப்படை தலைவன் பரத்திற்கு, பழனிவேலுவை துறையூரில் வைத்து அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து துறையூரிலிருந்து தா.பேட்டைக்கு வீட்டிற்கு பைக்கில் வந்த பழனிவேலுவை வழிமறித்து நைலான் கயிறு மூலம் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். மோகனாம்பாள் தான் தப்பித்துக் கொள்வதற்காக கணவர் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக மோகனாம்பாள், கள்ளக்காதலன் ராஜா, கூலிப்படையை அறிமுகம் செய்து வைத்த வளையப்பட்டி சுதாகர் ஆகிய மூன்று பேரையும் கைது போலீசார் செய்துள்ளனர்.

Related Stories: