வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்

புதுக்கோட்டை, பிப்.24:  திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடவாளம் மூக்கம்பட்டி சம்பட்டிவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற திருநாவுக்கரசர் எம்பி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதேபோல எல்லா மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்த்து வருகிறது பாஜக.இது ஜனநாயகத்துக்கு விரோதமானது.

காவிரி உபரி நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று எதிர்பதற்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. கடலில் வீணாக கழிக்கக் கூடிய தண்ணீரை இதுபோன்ற திட்டங்களால் தான் தண்ணீரை சேமிக்க முடியும். காவிரி வைகை குண்டாறு திட்டம் தற்போது தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டது போல் உள்ளது. கடந்த 4 வருடங்கள் ஆட்சியில் இருந்த முதல்வர், ஏற்கனவே செய்திருக்கலாம். காவிரி -வைகை -குண்டாறு திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. அதிமுக, பாஜக தவிர வேற எந்த கட்சியும் கூட்டணியில் இருப்பதாக தெரியவில்லை.

திமுக கூட்டணி வலுவாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போல சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் தமிழக அரசு இன்று (நேற்று) தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் தான். இந்த ஆண்டுக்குரிய எந்த திட்டமும், நிதியும் அறிவிக்க முடியாது, என்றாலும் மீதமுள்ள மூன்று மாதங்களுக்கு தேவையான நிதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள 4.90 லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கடன் சுமை உள்ளது. மேலும் இந்த ஆண்டு முடிவதற்குள் அது 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: