கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்

அரியலூர், பிப்.24: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 122 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆண்டிமடம் மாலா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சங்கீதா, மாநில செயலாளர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன், செயலாளர் முத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் பங்கேற்று பேசினார்.

சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளருக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து, அவர்கள் அரியலூர் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 122 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

Related Stories: