ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விவசாயிகள் அனுபவ சுற்றுலா

ஜெயங்கொண்டம், பிப்.24: திருமானூர் வட்டார வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த மாநில அளவிலான கண்டுணர்வு சுற்றுலாவிற்கு விவசாயிகள் சோழமாதேவியிலுள்ள கிரீடு வேளாண் அறிவியல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிலையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுக்கண்ணன் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணைய முறையினை பின்பற்றி உற்பத்தியை பெருக்கி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார். தொழில் நுட்ப வல்லுநர் ராஜ்கலா, பயிர் சாகுபடியில் மஞ்சள் மற்றும் நீலநிற ஒட்டும் அட்டைகள், இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் சோலார் விளக்குப் பொறி கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், மண்புழு உரம் உற்பத்தி செய்தல், அசோலா சாகுபடி, பசுமைக் குடிலில் மரம் மற்றும் பழக் கன்றுகள் உற்பத்தி செய்தல், பரண்மேல் ஆடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்பு, சொட்டுநீர்ப் பாசன முறை ஆகியவை குறித்து விளக்கி செயல் விளக்கத் திடல்களுக்கு அழைத்துச் சென்று சந்தேகங்களுக்கு பதிலளித்தார். உதவி வேளாண் அலுவலர் ராதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி நன்றி கூறினார்.

Related Stories: