க.பரமத்தியில் வாரச்சந்தை கூடும் நாளில் சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல்

க.பரமத்தி, பிப்.24: க.பரமத்தியில் வாரச்சந்தை கூடும் நாளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சந்தைக்குள்ளேயே கடைகள் போட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் பரமத்தி கடைவீதியில் காவல்நிலையம் எதிரே செவ்வாய்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுகிறது. சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடைகள் போட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் பலர் வாரச்சந்தை நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் சிறு, சிறு கடைகளை போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் மினி பஸ்கள், லோடு ஏற்றி செல்லும் லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலையோர கடைகள் இடையூறாக உள்ளது. மேலும் காய்கறிகள் வாங்குவதற்காக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூறால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் அடிக்கடி வாய் தகராறு வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை மாற்றி அந்த கடைகளை சந்தைக்குள் வைத்து வியாபாரம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில் கடைவீதி அருகாமையிலேயே வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு ஒரு வழிபாதையாகும். இங்கு சாலையில் சென்டர் மீடியன் இருப்பதால் பலர் சென்ற வழியிலேயே திரும்புகின்றனர். இங்கு வந்து செல்வோர் செவ்வாய் வாரசந்தை சாலையோர கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனால் வாகன ஓட்டுனர்களுக்கும், நடந்து சொல்வோருக்கும் அடிக்கடி சிறு சிறு விபத்து ஏற்பட்டு வாய் வாக்குவாதம், வாய்த்தகராறு ஏற்பட்டு வருகிறது. எனவே வாரச்சந்தையால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை மாற்றி, சந்தைக்குள் வைத்து வியாபாரம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: