புதுக்கோட்டை, ஏப்.23: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக போர்வெல் போடும் விவசாயிகளுக்கு நீர் ஊற்று பார்க்கும் அலுவலர்கள் நியமிக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் தற்போதே கண்மாய்களில் தண்ணீர் இன்றி கடும் வறட்சி நிலவுகின்றது. விவசாயிகள் தாங்கள் போட்டுள்ள போர்வெல்லில் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலை உள்ளது.
இதனால் தாங்கள் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை, பலா, மா போன்ற பணப்பயிர் மரங்களை காப்பாற்ற விவசாயிகள் அடுத்தடுத்து போர்வெல் போடுகின்றனர். கடன்கள் வாங்கி போர்போட்டும் தண்ணீர் வராமல் ஏமாற்றமடைகின்றனர். நீர் ஊற்று பார்க்க தேங்காய் வைத்துப்பார்ப்பவர்கள், செயிண் வைத்துப்பார்ப்பவர், கம்பு வைத்து பார்ப்பவர்கள் என கிராம புறப்பகுதியில் உள்ள நீரோட்டம் பார்ப்பவர்களை வைத்து பார்த்து போடுவதால் இவை பெரும்பாலும் தண்ணீர் வருவதில்லை.
இதனால் இப்பகுதி விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு நீர் ஊற்று பார்க்கும் அலுவலர்கள் மூலம் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவைப்படும் விவசாயிகளுக்கு நீரோட்டம் பார்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
