திருப்போரூர், ஏப்.23: சுதந்திர இந்தியாவில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியபோது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகே பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் பங்கெடுத்தாலும், அவர்களின் உரிமைகளை கேட்டுப்பெற வேண்டிய நிலை இன்னும் உள்ளது. இருப்பினும் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் பெண்களே இருக்கும் வகையில் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் திருப்போரூர் தொகுதியில் அடங்கிய மடையத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி இளஞ்சிவப்பு நில வாக்குச்சாவடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி வளாகம், அறை, வரவேற்பு வளைவு போன்றவை அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒரு வாக்குச்சாவடியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
