கரூர், ஏப். 23: கரூர் மாவட்ட த்தில் நான்கு தொகுதிகளிலும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு ஆகியவற்றால் இது வரை ரூ.1 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15ம்தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முறையான ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்வதை காண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவினர் நான்கு தொகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று காலை 6 மணி வரை ரூ. 1 கோடியே 7 லட்சத்து 74 ஆயிரத்து 681 ஐ பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முறையான ஆவணங்கள் இருந்த காரணத்தினால் இந்த குழுவினர் ரூ. 1 கோடியே 1 லட்சத்து 89 ஆயிரத்து 621 ஐ திருப்பி செலுத்தினர். தற்போது வரை ரூ. 5 லட்சத்து 5 ஆயிர த்து 60 மட்டும் இருப்பில் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவினர் 79 வழக்குகளை பதிவு செய்து, 72 வழக்குகளை விடுவித்துள்ளனர். 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
