×

சிறுமி ஓட்டி வந்த ஸ்கூட்டி கார் மீது பயங்கர மோதல்: குன்றத்தூரில் தாய், மகள் படுகாயம்

குன்றத்தூர்: குன்றத்தூர் மேத்தாநகர் மெட்ரோ கிராண்ட் சிட்டி அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் ஜோதி (55). இவர், நேற்று தனது மகள் ஜெயப்பிரியா (17) என்பவருடன் ஸ்கூட்டியில் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். ஸ்கூட்டியை ஜெயப்பிரியா ஓட்ட, தாய் ஜோதி பின்னால் அமர்ந்து இருந்துள்ளார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த சொகுசு கார் மீது ஸ்கூட்டி மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை அக்கம்பக்கத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த குன்றத்தூர் பி.கே.வி.நகரை சேர்ந்த சதீஷ் (32) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக சென்னை புறநகர் பகுதிகளில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கி அதிகளவில் சாலை விபத்து ஏற்படுத்தி வருகின்றனர். இதைதடுக்க சிறுவர், சிறுமிகள் இயக்கும் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்வதுடன் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு செய்வதால் மட்டுமே இனிவரும் காலங்களில் சிறுவர்கள் மூலம் ஏற்படும் வாகன விபத்து குறைந்து, உயிரிழப்பு தடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

Tags : Kundrathur ,Jyothi ,Mother Teresa Street, Methanagar Metro Grand City, Kundrathur ,Murugan ,Temple ,Jayapriya ,
× RELATED பயணிகள் கூட்டம் அலைமோதல்; விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு