கொழும்பு: இலங்கை நுவரொவியா மாவட்டம் ஹட்டன் டிக்கோயா பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்கை அடியோடு முடங்கியது. மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தது சென்றன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகள் நடவெடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களையும் அத்தியாவச பொருட்களையும் டிராக்டர்களில் ஏற்றி கொண்டு தரைப்பாலத்தை கடந்தனர். பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நிலவும் இந்த மோசமான வானிலை காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே அந்நாட்டின் வானிலைமையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பிற்பகலுக்கு மேல் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென் மாகாணங்களின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது .
