கோயிலில் பெண்களை கேலி செய்த வழக்கு 6ஆண்டுகளாக தலைமறைவானவர் வீட்டில் நீதிமன்ற நோட்டீஸ்

எட்டயபுரம், பிப்.24: எட்டயபுரம் அருகே உள்ள கீழ்நாட்டுக்குறிச்சியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (30). இவர் கடந்த 2014ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதூர்பாண்டியாபுரத்தை சேர்ந்த ஆசிரியை மற்றும் அவருடன் சென்ற பெண்களை முத்துப்பாண்டி கேலி செய்ததாக இருக்கன்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் கடந்த 2015ம் ஆண்டு இருக்கன்குடி கோயிலுக்கு சென்ற குருவிகுளத்தை சேர்ந்த ஜேசுராஜ் (41) உள்ளிட்டவர்களிடம் தகராறு செய்த வழக்கிலும் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தபோது முத்துப்பாண்டி திடீரென தலைமறைவானார். இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள அவருக்கு சாத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

 இதனையடுத்து இருக்கன்குடி   இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் உத்தரவின்பேரில் எஸ்ஐ ஆறுமுகவேல் மற்றும் போலீசார் கீழ்நாட்டுக்குறிச்சியில் உள்ள முத்துப்பாண்டி வீட்டில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டை ஒட்டிச்சென்றனர்.

Related Stories:

>