தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் கருத்து கேட்பு

தூத்துக்குடி, பிப்.24: தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் ஓடுபாதை விரிவாக்கம் தொடர்பான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக குமாரகிரி, சேர்வைக்காரன்மடம், முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம் பகுதியில் நிலம் எடுப்பது குறித்தும், விமான நிலைய ஓடுபாதையை 45 மீட்டராக அகலப்படுத்துவது, உள்நாட்டு முனையம் அமைத்தல், வாகன நிறுத்துமிடம் மற்றும் முழுமையான சுற்றுச்சுவருடன் 6 கண்காணிப்பு கோபுரம் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு அது தொடர்பான கருத்துக்கள் கேட்கப்பட்டது.

கூட்டத்தில், கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது: ‘விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பாக விமான நிலைய வளாகத்தில் இருந்து மழைநீரை கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். விமான நிலையத்திற்கு தேவையான தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும். விமான நிலைய வளாகத்திற்கு அருகில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகள் தெளிவுப்படுத்தப்படுவதுடன், இதற்காக எடுக்கப்பட்ட நில விபரங்கள் தாலுகா அலுவலகத்திலுள்ள தகவல் பலகை மூலமாகவும், நில உரிமையாளர்களுக்கு தபால் மூலமாகவும் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில், துடிசியா தலைவர் ஜெயபிரகாசம், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் பணியாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>