மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 427 பேர் கைது திருவண்ணாமலையில் பரபரப்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

திருவண்ணாமலை, பிப்.24: பணி நிரந்தரம் செய்யக்கோரி கருப்பு உடையணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 427 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாநில அளவிலான மறியல் போராட்டம் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில பொருளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் விஜயா, சம்பத், அல்போன்ஸ், அரசு ஊழியர் சங்கம் பார்த்திபன், பரிதிமால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாணவர்களுக்கான உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.மேலும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை தொடர்ந்து அரசு வஞ்சிக்கிறது, எந்தவித பணப்பயனும் இல்லாமல் ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களின் முதுமைகாலம் மிகவும் துயரமாக உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

மேலும், நூற்றுக்கணக்கானோர் திரண்டு நடத்திய மறியல் போராட்டத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் 43 பேர் உட்பட 427 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அனைவரும், மாலை விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: