4ம் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணி ஜரூர்

திருப்பூர்,பிப்.24:திருப்பூர் மாநகராட்சிக்கான, நான்காவது குடிநீர் திட்டத்தில், சுமார் ரூ.350 கோடி மதிப்பிலான பணிகள் வஞ்சிப்பாளையம் பகுதியில் துவங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில், பவானி மற்றும் காவிரி ஆற்று நீரைப் பயன்படுத்தும் வகையில், மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மூன்றாவது திட்டத்தில், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சாய, சலவை ஆலைகளுக்கான தண்ணீரும் வழங்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து வழங்கும், ஆயிரத்து 90 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்காவது திட்டம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

பவானி ஆற்று தண்ணீரை எடுத்து, சுத்திகரித்து வழங்குதல், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வரை குடிநீர் குழாயை கொண்டு வருதல், அன்னூரில் இருந்து திருப்பூரில் உள்ள தொட்டிகள் வரை, குடிநீரை கொண்டு வருதல் என, மூன்று கட்டமாக பணிகள் நடந்து வருகின்றன.

மேட்டுப்பாளையத்தில், ஆறு ஏக்கர் நிலம் வாங்கி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, மூன்று நிறுவனங்கள், பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கப்பட்டது. திருப்பூர், வஞ்சிப்பாளையம் அடுத்த கனியாம்பூண்டி அருகில் திருப்பூர் வரை, குடிநீர் குழாய் பதித்து, தண்ணீர் எடுத்து வரப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான குழாய் பணிக்கு, ஒதுக்கப்பட்டு வேலை நடந்து வருகிறது. இத்தகைய குழாய்களை புதிதாக கட்டியுள்ள, 39 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் வரை கொண்டு சேர்க்கும் பணியும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories:

>