கடந்த 10 நாட்களில் 488 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்,பிப்.24:திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட 60 வார்டுகளில் சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படாமல் உள்ளது. வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள், சொத்து வரி, வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகையை எளிதில் செலுத்தும் வகையில், மாநகராட்சி பிரதான அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் வரி வசூல் மையங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரை முதல் தவணை, அக்டோபரில் இருந்து மார்ச் வரை இரண்டாவது தவணை வரி செலுத்த வேண்டும். தற்போது, 2வது தவணை காலம் முடிய ஒன்றரை மாதமே உள்ள நிலையில், பல கோடி ரூபாய் வரியினங்கள் பொது மக்கள் செலுத்தாமல் உள்ளனர். இதையடுத்து, வரி செலுத்தாதவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஆண்டுக் கணக்கில் வரி செலுத்தாமல் உள்ளவர்களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வரி வசூலிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. உதவி ஆணையர் (வருவாய் பிரிவு)தங்கவேல்ராஜன் தலைமையிலான குழுவினர் கடந்த 12ம் தேதி முதல் வரி வசூலில் ஈடுபட்டனர். இதில்,சொத்துவரி மற்றும் பாதாள சாக்கடை வரி, குடிநீர் மற்றும் இதர வரியினங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ரூ.11 கோடி வரி வசூல் செய்யப்பட்டது. மேலும், குடிநீர் வரி செலுத்தாத 488 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதில், முதலாவது மண்டலத்தில் 160 வீடுகளிலும், 2வது மண்டலத்தில் 180 வீடுகளிலும், 3வது மண்டலத்தில் 100 வீடுகளிலும், 4வது மண்டலத்தில் 48 வீடுகளிலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இதை பயன்படுத்தி நிலுவையிலுள்ள வரியினங்களை கட்டி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: