தென்னை, பாக்கு மரங்களை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

ஈரோடு, பிப். 24:   ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன்  கூறியுள்ளதாவது: தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சிகளின் தாக்குதல் சமீபத்தில் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. வயது முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளின் ஓலைகளின் அடியில் இடுகிறது. குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மற்றும் பாக்கு மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு தேன் போன்ற திரவ கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும்.வெள்ளை ஈக்கள் குறித்து விவசாயிகளுக்கு வெள்ளை ஈக்கள் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகிறது. மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலீத்தின் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டு பொறிகளை ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.  மேலும் மஞ்சள் விளக்கு பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னை மற்றும் பாக்கு தோப்புகளில் அமைத்து மாலை நேரங்களில் 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். தாக்கப்பட்ட தென்னை மற்றும் பாக்கு மரங்களின் இலைகளின்மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமாக வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.

கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் விடுதல் நல்ல பயனளிக்கும். கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தென்னை விவசாயிகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>