சிவகிரி அருகே கோயில் விழாவில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ.25 ஆயிரத்துக்கு ஏலம்

மொடக்குறிச்சி, பிப். 24: ஈரோடு சிவகிரி அருகே விளக்கேத்தி, புது அண்ணாமலை பாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் என்ற சித்தர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பெரியவீட்டு கோயில் முன்பாக பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் சாமி பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் ஏலம் விடப்பட்டது.  இந்த ஏலத்தில் பக்தர்கள் போட்டி போட்டு ஏலம் கூறினர். இதில் நாமக்கல்லை சேர்ந்த  பழனிவேல் என்பவர் ரூ.25 ஆயிரத்திற்கு ஒரு எலுமிச்சம் பழத்தை ஏலத்தில் வாங்கினார். அதைத்தொடர்ந்து சாமி நெற்றியில் வைக்கப்பட்ட 10 கிராம் வெள்ளிக்காசை ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ரூ.35 ஆயிரத்துக்கு ஏலம் கூறி எடுத்தார். அதேபோல் சாமி கையில் அணிவிக்கப்பட்ட 10 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரத்தை ஓலப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் ரூ.40 ஆயிரத்து 300க்கு ஏலத்தில் வாங்கினார். கோயில் விழாவில் ஒரு எலுமிச்சம்பழம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது. கடந்த ஆண்டு ஒரு எலுமிச்சம்பழம் ரூ.30 ஆயிரத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: