கோவை, பிப். 24: கோவை மண்டலத்தில் மின்வாரிய ஊழியர்கள் விதிகளை மீறி செயல்பட்டால், லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய இயக்குனர் எச்சரித்துள்ளார். கோவை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அனைத்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள், தலைமை பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர் ஆகியோருடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குனர் ஹெலன் தலைமையில் இரண்டு நாள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர். இதில், மின்வாரிய இயக்குனர் ெஹலன் பேசியதாவது:மின்வாரியத்தில் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. வருவாயை பெருக்கும் வகையில் நிலுவையில் உள்ள மின் கட்டண தொகைகளை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மின் இணைப்பு தொடர்பாக இனி ஆன்லைன் மூலமாகவே அனைத்து விண்ணப்பங்களும் ஏற்கப்படும். இதனால், மின் இணைப்பு கேட்கும் பொதுமக்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டவுடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பொதுமக்களிடம் பணிவுடன் நடக்க வேண்டும். கையூட்டிற்காக விண்ணப்பத்தை நிலுவையில் வைத்திருக்ககூடாது.