குற்றவாளிகளின் ஆதார் விவரம் சேகரிப்பு

கோவை, பிப்.24:  கோவை மாவட்டத்தில் நகர், புறநகர் பகுதிகளில் வாகன சோதனை, ரோந்து பணி நடக்கிறது. இதில் சரியான தகவல் தெரிவிக்காத, முகவரி, தொழில் தொடர்பான விவரங்கள் இல்லாத சந்தேக நபர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.அரசூர், கணியூர், நீலம்பூர், சூலூர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகளவு தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் முகவரி, தொழில் விவரங்களை சரியாக தெரிவிக்காமல் இருப்பதாக தெரிகிறது. இவர்களில் சிலர், வெளிமாநிலங்களில் நடந்த குற்றங்களில் தொடர்புடையவராக இருக்கலாம் என புறநகர் பகுதி போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்களை விசாரிக்கும் போலீசார், கைரேகை பதிவுகளை சேகரித்து வருகின்றனர். அடிதடி தகராறு, மோதல், திருட்டு போன்றவற்றில் தொடர்புடைய நபர்கள், ஏற்கனவே குற்ற வழக்கில் சிக்கியவர்களின் கைரேகை பதிவு போலீஸ் ஸ்டேஷன்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருட்டு, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க கைரேகை பதிவு முக்கிய தடயமாக கருதப்படுகிறது. தற்போது கைரேகை பதிவுடன் ஆதார் அடையாள அட்டை விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். ஆதார் அடையாள அட்டை எண் இருந்தால், அவற்றை வைத்து சந்தேகநபர்கள், குற்றவாளிகளின் முழுவிவரங்களையும் போட்டோ விவரங்களுடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான வலைப்பின்னல் (சிசிடிஎன்எஸ்) தகவல்களிலும் குற்றவாளிகளின் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: