ஸ்மார்ட் சிட்டியில் ‘ஸ்மார்ட்’ இல்லை

கோவை,பிப்.24:  ஸ்மார்ட் சிட்டியில் ஸ்மார்ட் எதுவும் இல்லை, போக்குவரத்து நெரிசல் மட்டுமே இருப்பதாக கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர பொதுக்குழு கூட்டம் வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது: தொழில் மண்டலமான கோவை பகுதி தற்போது சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாகவே கோவையை சுற்றியிருக்கிற பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். இதை பற்றி மத்திய மாநில அரசுகள் கவலைப்படாமல் இருக்கின்றனர். கோவை மாநகரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை. மிகவும் சிரமப்படுகிறோம் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்தால் 10 ஆண்டுகள் கழித்து வருகிற மெட்ரோ ரயிலை பற்றி அரசாங்கம் பேசி வருகிறது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற சொன்னவுடனே மெட்ரோ ரெயில் வந்துவிடுமா??,

இதை உடனடியாக செய்ய அரசு நடவடிக்கை எடுத்தாலும் செய்து முடிக்க 10 ஆண்டுகளாவது ஆகும். அவினாசி சாலை முழுவதும் ஒரு உயர்மட்ட பாலத்தை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். விமான நிலையத்தை விரிவாக்காமல், துபாய் போன்ற நாடுகளுக்கு விமான சேவை துவங்காமல் தொழிற்துறை வளர்ச்சியை உறுதிசெய்ய முடியாது. கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கோவையில் எந்த ஸ்மார்ட்டும் இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அனைத்து மோசமாகியுள்ளது. தமிழக அரசு இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க விளையாட்டு துறையில் மாணவர்களும் இளைஞர்களும் இறங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு விளையாட்டு கல்லூரி துவங்க வேண்டும். நாட்டில் நிலவும் பொருளாதார சரிவை குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு  வந்து பாஜக அரசு திசை திருப்பியுள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

 டெல்டா மாவட்டங்களை விவாசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் கொங்கு மண்டலம் டெல்டாவை போல பாசன வசதியுடைய பகுதியல்ல. சிரமத்திற்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலங்களை பல்வேறு திட்டங்களுக்காக அபகரிக்கும் முயற்சியை மத்திய மாநில அரசுகள் செய்கின்றன. டெல்டாவை போல கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கவேண்டும். கோவையில் இயங்கிவரும் சிறு,குறு தொழில் நிறுவனங்களின் பாதிப்பை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவை ஒரு வேதனையான காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஜவுளித்துறையை பொறுத்தவரை கொங்கு மண்டலத்திலிருந்து அதிகமான ஜவுளியை நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஏற்றுமதியை நம்பியே ஜவுளித்துறை இயங்கிவருகிறது. ஆனால் பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்தபின் ஜவுளித்தொழிலை முடக்குவதற்கான முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எம்.ஏ.ஐ.எஸ் சலுகை ஜுலை மாதம் முதல் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் சுமார் 8 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இதை நம்பியே சிறு,குறு தொழில்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் செய்வதால் மிக சுலபமாக செய்துவிடலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் சர்வர்கள் இயங்குவதே இல்லை. இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

Related Stories: