பழநி, ஏப். 21: கோடை உழவுக்கு பின் நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தலாம் என வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: அறுவடை முடிந்தவுடன் மானாவாரி நிலங்களில் வரப்பு ஓரங்களில் பள்ளக்கால் பகுதியில், கரிசல் மண் ஆங்காங்கு இருக்கும். மஞ்சணத்தி செடிகள், குரண்டி முள், காக்கா முள் ஆகியவற்றை அழிக்க வேண்டும். இதனை இந்த கோடை காலத்தில் ஒழிக்க சிறிதளவு பட்டையை நீக்கிவிட்டு 2, 4டி மருந்தை பசை போல் தயாரித்து தண்டு பகுதியில் தடவினால் அவை காய்ந்து போகும். இவ்வாறாக களை செடிகளை அழித்து கோடை உழவில் அகலப்பாத்தி அமைத்து மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும்.
