வேலை செய்ய விடாமல் நெருக்கடி மாநகராட்சி பணிகள் குறித்து அவதூறு

கோவை,  பிப்.24:  கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் உதயகுமார் தமிழக  நகராட்சிகள் நிர்வாகம் ஆணையர், செயலாளர், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியுள்ளதாவது:  கோவை,  சென்னை உட்பட பல்வேறு  மாநகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள்  நடக்கிறது. டெண்டர் முறைகேடு, செட்டிங் டெண்டர்,  தகுதியற்ற  நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு என பல்வேறு  தவறான தகவலை பரப்பி வருகின்றனர். திட்டப் பணிகள்  அனைத்தும் இ டெண்டர் முறையில் பெறப்படுகிறது. இதில் குறைந்தபட்ச தொகையில்  பணி நடத்த முன்வரும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறைப்படி  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக பணிகள் வழங்கப்படுகிறது. விதிமுறைப்படி பணி  முடித்தால் மட்டுமே பில் தொகை பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.  

  திட்ட பணிகளுக்கு பில் தொகை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.   25,  30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தப்பணிகள் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்கள் டெண்டர்  எடுத்த பணிகளை நடத்த முடியாமல் திணறி வருகிறது. சில திட்டப் பணிகளில்  நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

 தளவாட பொருட்கள்,  தொழிலாளர்கள் கூலி, கட்டுமான  பொருட்கள் விலை ஏற்றம் என பல்வேறு சிக்கலான நிலைகளில் பணிகளை ஒப்பந்த  நிறுவனங்கள் செய்து வருகின்றது. சில நிறுவனங்கள் நெருக்கடியால் பணிகளை  பாதியிலேயே விட்டு சென்று விட்டது. நிலைமை இப்படி இருக்க,  அமைச்சரின் உறவினர்,  நண்பர்கள், வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு  டெண்டர் ஒதுக்கீடு என சில அமைப்புகள் தவறான தகவல் பரப்புகிறது.

  டெண்டர் பணி விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை  நடத்தியுள்ளனர்.  இதில் லஞ்ச முறைகேடு, விதிமுறை மீறல் நடக்கவில்லை என  அறிக்கையில் உறுதி  செய்யப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்த நிறுவனங்களை மறைமுகமாகவும்,   நேரடியாகவும் மிரட்டும் நோக்கத்தில் மேலும் பல புகார்களை சிலர் கூறி  வருகிறார்கள். நடத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை முடக்கும் வகையில் பொது  வெளியில், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற யூகமான தகவல்களை பதிவு செய்கிறார்கள்.  இது ஏற்கத்தக்கதல்ல.  ஒப்பந்த நிறுவனங்கள் முறைகேடாக  பணி செய்கின்றன   என்ற தோற்றத்தை மக்களிடையே உருவாக்கி வருகிறார்கள்.   திட்டப் பணிகளை  சிறப்பாக செய்வதை தடுக்கும் நோக்கில் வதந்தி பரப்பப்படுகிறது. இதனால் சில  ஒப்பந்த நிறுவனங்கள் திட்டப்பணிகளை எடுக்க தயக்கம் காட்டும் நிலைமை உள்ளது.

  மாநகராட்சிகளில் மட்டுமின்றி பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை உட்பட பல்வேறு  துறைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்று பல்வேறு பணி்களை  நடத்தி வருகிறது. ஆனால் உள்ளாட்சியில் மட்டும் திட்டமிட்டு ஆதாரமற்ற  குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இவற்றை தவிர்க்க ஒப்பந்த நிறுவனங்களின்  பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இ  டெண்டர் நடைமுறை மேலும் எளிதாக்கப்பட வேண்டும். டெண்டர் நிறுவனங்கள்  ஒப்பந்தப்புள்ளி குறித்த விவரங்களை பொதுமக்கள் காண வழிவகை செய்ய வேண்டும்.   திட்டப் பணிகளை கள ஆய்வு செய்ய கூட்டு குழு அமைக்க வேண்டும். அவதூறு  பரப்பும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க  வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

Related Stories: