×

வேளாண் மண்டலத்தில் மேலும் மாவட்டங்களை இணைக்க வேண்டும்

ஈரோடு, பிப். 24:  வேளாண் மண்டலத்தில் திருச்சி, கரூர், அரியலூர் மாவட்ட பகுதிகளையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் துரைமாணிக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளர் துரைமாணிக்கம் கூறியதாவது: தமிழ அரசு காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் முழுமையாகவும், கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பகீரபாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணல்மேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டப்பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இதில், இந்த மூன்று மாவட்ட பகுதிகளையும் வேளாண் மண்டல பகுதிகளில் சேர்க்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே செயலிலுள்ள திட்டங்களுக்கும், தற்போது அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கும் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விலக்களித்திருப்பது வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட நோக்கத்திற்கு பொருத்தமில்லாதது. இதில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தமிழக முதல்வர் தலைமையில் அதிகார அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகளையும், விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். சிறந்த வல்லுனர்களை கொண்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளிடமும், விவசாய சங்க பிரதிநிதிகளிடமும் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாய சங்கங்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். ஆனால், இந்த பகுதியை பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் என கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் அறிவித்தார்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான உரிமையை ஒன்.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்டு, ஒன்.என்.ஜி.சி எண்ணெய் கிணறுகள் ஹைட்ரோ கார்பன் கிணறுகளாக மாற்றப்படும் என அறிவித்ததால் அப்பகுதியில் போராட்டம் அறிவித்தது. மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்ற பல திட்டங்களை எதிர்த்து அமைதி வழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு துரைமாணிக்கம் கூறினார்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை